மூதாட்டிக்கு கால் மாற்றி ஆபரேஷன் ஜி.ஹெச். டாக்டர் அதிரடி டிரான்ஸ்பர்: முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மீண்டும் சிகிச்சை

கோவில்பட்டி: கோவில்பட்டியில் மூதாட்டிக்கு கால் மாற்றி ஆபரேஷன் செய்த அரசு டாக்டர் ஓட்டப்பிடாரம் ஜி. ஹெச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார். முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் மூதாட்டிக்கு மீண்டும் வலதுகாலில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் முருகவேல் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட மறவர் காலனியைச் சேர்ந்தவர் குருவம்மாள் (67). இவருக்கு 2 மகன்கள் இருந்தும் யாரும் கவனிப்பதில்லை.

குருவம்மாள் தனியாக வசித்து வருகிறார். லிங்கம்பட்டியில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து தனது செலவுகளை சமாளித்து வருகிறார். குருவம்மாளின் வலது காலில் அடிக்கடி வலி ஏற்பட்டதால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மார்ச் 22ம் தேதி சேர்ந்தார். அவருக்கு ஏப்.4ம் தேதி டாக்டர் சீனிவாசன் தலைமையில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். ஆனால் வலி ஏற்பட்ட வலது காலுக்கு பதிலாக எந்த வலியும் இல்லாத இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது.

அறுவை சிகிச்சை முடிந்து மயக்க நிலையில் இருந்த மூதாட்டி குருவம்மாளை பெண்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றியுள்ளனர். மயக்கம் தெளிந்த பின்னர் தான் வலதுகாலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதை, மூதாட்டி உணர்ந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட டாக்டர் சீனிவாசனிடம் கேட்ட போது, இடது காலில் கட்டி இருந்தது, அதனால் ஆபரேஷன் செய்தோம் என்று கூறியுள்ளார். ஆனால் இடது காலில் கட்டி எதுவும் இல்லை என்று மூதாட்டி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வலி உள்ள வலது காலில் மீண்டும் ஆபரேஷன் செய்து விடுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு மூதாட்டி மறுத்து விட்டதோடு, அதற்கு சிகிச்சை மட்டும் அளியுங்கள் என்று கூறி விட்டார். இதற்கிடையே தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் முருகேவேல் இதுகுறித்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட மூதாட்டி குருவம்மாள், அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

அதன்பின்னர் மூதாட்டிக்கு ஆபரேஷன் செய்த டாக்டர் சீனிவாசன், ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் முருகவேல் அளித்த பேட்டி:

மூதாட்டிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக எழுந்த பிரச்னையைத் தொடர்ந்து விசாரணை நடத்தினேன். முதற்கட்டமாக டாக்டர் சீனிவாசன் ஓட்டப்பிடாரம் ஜி.ஹெச்சுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 2 நாட்களில் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு வலது காலில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சர்ச்சை டாக்டர்

மூதாட்டிக்கு தவறான ஆபரேஷன் செய்த டாக்டர் சீனிவாசன், கடந்த ஜன.22ம் தேதி போலீசார் சல்யூட் வைக்கவில்லை என்று பிரச்னை கிளப்பியவர் என்று கூறப்படுகிறது. இவர் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார் என்று கோவில்பட்டிக்கு வரும் நோயாளிகள் தெரிவித்தனர்.

Related Stories: