அதிகரித்து வரும் மோசடி போன் அழைப்புகள் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை9: அதிகரித்து வரும் மோசடி போன் அழைப்புகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும், என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, வாடிக்கையாளர்களை செல்போனில் தொடர்புகொண்டு ஏடிஎம் கார்டு விவரங்கள், ஓடிபி போன்றவற்றை கேட்பது என்ற நிலையிலிருந்து முன்னேறி மோசடி நபர்கள் தற்போது பல்வேறு உத்திகளை கையாண்டு பொதுமக்களை ஏமாற்ற துவங்கியுள்ளனர். உதாரணமாக, காஸ் மானியம் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும், எனவே அக்கவுண்ட் நம்பர் கொடுங்கள், போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது மொபைல் எண்ணை மாற்றி உங்கள் எண்ணை கொடுத்து விட்டேன், உங்கள் மொபைலுக்கு ஒரு ஓடிபி வரும் அதை கொடுக்குமாறு கூறி போன் அழைப்புகள் வரும். அந்த மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதேபோல் பேன்கார்டு மற்றும் கேஓய்சி தகவல் பதிவு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் மொபைல் எண் பிளாக் செய்யப்படும் அல்லது வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும் என்று வரும் குறுஞ்செய்திகளை பொதுமக்கள் நம்ப கூடாது.

அந்த குறுஞ்செய்தியில் வரும் லிங்கை கிளிக் செய்ய கூடாது. அதிலுள்ள மொபைல் எண்ணுக்கு கால் செய்ய கூடாது.  மேலும் அமேசான் பகுதி நேர வேலை  என்பது போல் வாட்ஸ்அப், டெலிகிராமிலோ வரும் மெசேஜ்களை நம்பி யாருக்கும் பணம் அனுப்ப கூடாது. ஓஎல்எக்ஸ் போன்ற ஆப்களில் பொருளை விற்கும் போது கியூர்ஆர் கோடு ஸ்கேன் செய்ய சொன்னால் அதனை தவிர்த்துவிட வேண்டும். லோன் ஆப் மூலம் கடன் வாங்க வேண்டாம்.

பொதுமக்கள் முகம் தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். வாட்அப் குரூப்பிலோ, டெலிகிராமிலோ தொடர்பு கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுபவர்களின் பேச்சை நம்பி பணம் அனுப்பவோ கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பவோ கூடாது. பொதுமக்கள் தாங்கள் நேரில் பார்க்காத, நன்றாக தெரியாத நபர்களின் பேச்சை கேட்டு பணம் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் எவரேனும் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் 1930 என்ற  உதவி எண்ணிற்க்கு போன் செய்யலாம். இவ்வாறு போலீஸ் கமிஷனர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: