காவிரி படுகையின் மேகதாது உள்ளிட்ட வேறு ஏதேனும் இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் உறுதி

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட கொள்கை விளக்க குறிப்பில் கூறி இருப்பதாவது: கர்நாடக அரசு மேகதாதுவில் 67.16 டிஎம்சி அடி கொள்ளளவு கொண்ட ஒரு அணையை கட்டுவதற்கு சாத்தியக்கூறு அறிக்கையை தன்னிச்சையாக தயாரித்து, ஒன்றிய நீர் குழுமத்திற்கு சமர்ப்பித்ததில் இருந்தே தமிழ்நாடு அரசு தனது கடுமையான எதிர்ப்பினை கர்நாடக அரசிற்கும் மற்றும் ஒன்றிய அரசிற்கும் தெரிவித்து வருகிறது.

இதனிடையே, கர்நாடக அரசு அதன் 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் மேகதாது திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரியவந்தது. தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடுவர் மன்றத்தின் இறுதியாணை மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மாறாக கர்நாடகா, மேகதாது என்னும் இடத்திலோ அல்லது கர்நாடகாவில் உள்ள காவிரிப் படுகையின் வேறு ஏதேனும் இடத்திலோ அணை கட்டுவதை தடுத்து நிறுத்த, தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

* ஆந்திர அரசிடம் இருந்து சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை பெறுவதற்காக தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   

 * சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளான திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஏரி, பூண்டி ஏரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிகளை தூர்வாரும் பணிகள் ரூ.20 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

* திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.9 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் செங்குன்றம் ஏரியினை தூர்வாரும் பணி தொடங்கப்பட உள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த 4 ஏரிகளை தூர்வாருவதன் மூலம் 1,904 டி.எம்.சி. அடி கொள்ளளவு மீட்கப்படும்.

* வெளிநாடுகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் சுமார் 5 லட்சம் மெட்ரிக் டன்கள் ஆற்று மணல், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் மற்றும் தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஆகிய துறைமுகங்களில் இறக்குமதி செய்ய நீர்வளத்துறைக்கு தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* மலேசியாவில் இருந்து ஆற்று மணல் இறக்குமதி செய்யப்பட்டு, எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் இருந்து நீர்வளத் துறையின் மூலம் இணையதளத்தின் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 9 கப்பல்கள் மூலம் மணல் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: