பின்னால் சென்ற லாரி மோதி மற்றொரு லாரி கவிழ்ந்தது: ஐஸ்கிரீம் கம்பெனி சுற்றுச்சுவர் இடிந்தது: லேசான காயத்துடன் டிரைவர்கள் தப்பினர்

ஸ்ரீபெரும்புதூர்: அதிக பாரத்துடன் ஜல்லிகற்களை ஏற்றிசென்றபோது பின்னால் சென்ற லாரி மோதி மற்றொரு லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்னானது. இதில் லேசான காயத்துடன் டிரைவர்கள் உயிர் தப்பினர். சென்னை வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வழியாக இன்று அதிகாலை அதிக பாரத்துடன் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு 2 டாரஸ் லாரிகள் ஒன்றின் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது. சாலமங்கலம் அருகே வந்தபோது பின்னால் வந்துகொண்டிருந்த லாரி திடீரென முன்னால் சென்ற லாரியின் பின்புறம் வேகமாக மோதியது. இதனால் நிலைதடுமாறிய மற்றொரு லாரி, அருகில் இருந்த தனியார் ஐஸ்கிரீம் கம்பெனியின் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் ஏற்றிவரப்பட்ட ஜல்லி கற்கள் சாலையில் சிதறின. இதில்  லாரி டிரைவர்கள் லேசான காயத்துடன்  உயிர் தப்பினர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்  காயத்துடன் இருந்த இரு டிரைவர்களையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ஐஸ்கிரீம் கம்பெனியின் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக பாரத்துடன் போட்டிபோட்டு அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதிக வேகமாக செல்லும் லாரி டிரைவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: