வீடுகளுக்கு ‘ஃபைபர் லைன்’ இணைய வசதி: மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்..!

புதுடெல்லி: வீடுகள் தோறும் ஃபைபர் லைன் இணைய வசதி அமைக்க சரியான கொள்கை வகுக்க வேண்டும் என்று திமுக எம்பி தயாநிதிமாறன் மக்களவையில் வலியுறுத்தினார். மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் நாடாளுமன்ற மக்களவையில் பேசுகையில், ‘ஃபைபர் லைன் இணைப்பு அல்லது ஃபைபர் லைன் அமைப்பது தொடர்பான பிரச்னைக்கு பெரும் தடையாக இருப்பது அதற்கான வழித்தடம் என்று ஒன்றிய தொலைதொடர்பு அமைச்சர் கூறியுள்ளார். இந்த பதில் இப்போது மட்டும் நாடாளுமன்றத்தில் கூறப்படுவது இல்லை; முந்தைய தொலைத்தொடர்பு அமைச்சர்களும் இதே பதிலைதான் கூறியுள்ளனர்.

அனைத்து தொலைத்தொடர்பு வழங்குநர்களுக்கும் மாநில சட்டங்களை புறக்கணித்து வழித்தட உரிமையை வழங்குவதை உறுதிசெய்ய முடியாமல் உள்ளனர். இன்றைய நிலையில் அதிவேக இணைய வசதியை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்காக வீட்டிற்கே ஃபைபர் இணைப்பை மக்கள் கோருகின்றனர். ​​தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் கேபிள் டிவி மூலம் ஃபைபர் லைன்களை ெகாடுப்பதற்கான கொள்கையை உருவாக்க வேண்டும். அதை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக மாற்றியமைக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

அரசிடம் பாரத்நெட் வசதி உள்ளது. இதன் மூலம் கிராமங்களுக்கு இணைய வசதியை ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இவ்விசயம் தொடர்பாக கொள்கை வகுப்பதை சரியாகச் செய்தால், ஃபைபர் லைன் இணைப்பு திட்டத்தை எளிதாக்க முடியும். அரசுக்கு ‘டிராய்’ உள்ளது. தொலைத்தொடர்பு வழங்குநர்கள் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு சரியான வழியை உறுதி செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்’ என்றார்.

Related Stories: