திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கஞ்சா பதுக்கி விற்ற சாது கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சாதுக்கள் வசித்து வருகின்றனர். கிரிவலப்பாதையில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாகவும், கஞ்சா போதையில் சில சாதுக்கள் தகராறில் ஈடுபடுவதாகவும், கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த எஸ்பி பவன்குமார், கிரிவலப்பாதையில் போலீசார் ரோந்து செல்ல உத்தரவிட்டார்.

அதன்பேரில் ஏஎஸ்பி கிரண்சுருதி தலைமையில் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி மற்றும் போலீசார் நேற்றிரவு சோதனை நடத்தினர். அப்போது, வாயுலிங்கம் கோயில் அருகே இருந்த ஒரு சாதுவின் பையை சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டனர். அதில் விற்பனைக்காக அரை கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி அடுத்த மேலூர் பகுதியை சேர்ந்த பாக்கியநாதன்(52) என்பதும், கிரிவலப்பாதையில் பல மாதங்களாக வசித்து வருவதும் ெதரியவந்தது.

மேலும், கஞ்சா விற்பனையில் வேறு யாராவது ஈடுபட்டுள்ளார்களா, இவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாது ஒருவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்துள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: