கொரோனா காலத்தில் பணிபுரிந்த 800 செவிலியர்களுக்கு விரைவில் அரசுப் பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

சென்னை: கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் நிச்சயம் பணி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா காலத்தில் பணியாற்றிய 2,000 செவிலியர்களின் 1,000க்கும் மேற்பட்டோருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுவிட்டது. 800 செவிலியர்களுக்கு மட்டும் தற்போதைய சூழலில் பணி வழங்க முடியாத நிலை உள்ளது. விரைவில் 800 செவிலியர்களுக்கும் அரசுப் பணி வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பேரிடர் காலத்தில் பணிபுரிந்த ஒருவரைக்கூட விட்டுவிடாமல் பணி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, அனைவருக்கும் பணி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நிச்சயம் பணி வழங்கப்படும் என்று செவிலியர்களிடம் அரசு தெரிவித்த பிறகும் இந்த போராட்டம் நடந்தது. சில கட்சிகளின் தூண்டுதல்படியே செவிலியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர், பேரிடர் காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு வருங்காலங்களில் அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் நிச்சயம் பணி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி போராட்டம் நடந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: