மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுர மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடக்கம்!!

மதுரை : மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ராமநாதபுர மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு கட்டிடம் கட்டும் வரை 2 ஆண்டுகளுக்கு பிற கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் இயங்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தது.

இதையடுத்து புதிதாக திறக்கப்பட்ட ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய 50 இடங்கள் எய்ம்ஸ் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றது. இந்த நிலையில் ராமநாதபுர மாவட்ட மருத்துவக் கல்லூரியின் 5வது தளம் முழுமையாக எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்காக ஒதுக்கப்பட்டு 50 மாணவர்களுக்கும் முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டன.

முதற்கட்டமாக உடற்கூறுயியல், உடலியங்கியல், பயோ கெமிஸ்ட்ரி மற்றும் சமூகம் சார்ந்த மருத்துவத்துறைக்கு 8 பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள பேராசிரியர்கள் கல்லூரியில் பணிக்கு இணைவார்கள் என்று தெரிகிறது.வகுப்பறைகள், உலக தரத்திலான விரிவுரை அரங்குகள், டிஜிட்டல் நூலகம் ஆய்வகம், பயிற்சிக்கூடம் ,உடற்கூறு அறுவை அரங்குகள், விடுதிகள், அலுவலக கட்டிடங்கள் என அனைத்து கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வகுப்பிற்கு வரும் மாணவர்கள் பார்மல் உடை அணிந்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: