தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை!: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: தடகள வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு பகுதியை சார்ந்தவர் செல்வி.சமீஹா பர்வீன் . இவர் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான காதுகேளாதோருக்கான  தடகளப் போட்டிகளில் கலந்துகொன்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 2019-ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் கேரள மாநிலம் , கோழிக்கோட்டில் அகில இந்தியக் காது கேளாதோருக்கான விளையாட்டு கவுன்சில் சார்பில் நடைபெற்ற 7 ஆவது காது  கேளாதோருக்கான ஜுனியர் - சப்ஜூனியர்  சாம்பியன்ஷிப் போட்டியில் 100மீ ஓட்டம், உயரம்தாண்டுதல், நீளம்தாண்டுதல் போன்றவற்றில் முதலிடம் பெற்றார்.

மேலும்  போலந்து  நாட்டில் 2021, ஆகஸ்ட்மாதம்  நடைபெற்ற  உலக காதுகேளாதோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்  நீளம்தாண்டுதலில் 7-வது இடமும் பெற்றார். அரசு சார்பில் உயரிய பயிற்சி மேற்கொள்ளவும், மாநில, தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க தேவையான உதவிகள் செய்திடவும், ஊக்கத்தொகை வழங்கிடவும் தமிழ்நாடு அரசிடம்  கோரிக்கை விடுத்து வந்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி, இவரது கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வெற்றியாளர் உருவாக்கும் திட்டத்தில்  சேர்க்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும், மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள பயணக்கட்டணம் போன்றவைகளுக்காகவும் ஊக்கத்தொகையாக ரூபாய் 2 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் போலந்து நாட்டில் நடைபெற்ற  உலக காதுகேளாதோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற தடகள வீரர்கள்  செல்வி. சமீஹா பர்வீன் (நீளம் தாண்டுதல்-long jump) ,செல்வன்.கே. மணிகண்டன்(நீளம் தாண்டுதல்-long jump 100m) மற்றும் ஆர்.சுதன் (மும்முனை தாண்டுதல்- triple jump) ஆகியோருக்கு  ஊக்கத்தொகையாக தலா ரூபாய் 30-ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: