5 முறை சேதமடைந்த வல்லநாடு தாமிரபரணி பாலத்தில் ரூ.21.42 கோடியில் சீரமைப்பு பணி-6 மாதங்களில் முடிக்க திட்டம்

செய்துங்கநல்லூர் : ஐந்து முறை சேதமடைந்த வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் ரூ.21.42 ேகாடியில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளை 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.தூத்துக்குடி - நெல்லை இடையே 4 வழிச்சாலையில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில், இதுவரை 5 முறை விரிசல் விழுந்து பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களும், பஸ் போக்குவரத்தும் நடந்து வருகிறது.

வாகைக்குளம் விமான நிலையத்திற்கும் ஏராளமான வாகனங்கள் சென்று திரும்புகின்றன. தற்போது ஒரு வழியில் மட்டும் போக்குவரத்து நடந்து வரும் நிலையில், கடந்த மார்ச் 17ம் தேதி 5வது முறையாக விரிசல் விழுந்துள்ளது.வல்லநாடு ஆற்றுப்பாலத்தை விரைந்து சரி செய்ய வேண்டுமென தூத்துக்குடி எம்பி கனிமொழியும், ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கு 2 முறை கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் பாலத்தை சரி செய்வதற்கான டெண்டர் நேற்று  வெளியிடப்பட்டு உள்ளது. இதில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய ரூ.21 கோடியே 42 லட்சத்து 74 ஆயிரத்து 924 மதிப்பில் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், 6 மாதங்களில்  பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: