ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 2022ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 27ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார். இதுகுறித்து சுற்றுச்சூழல் - காலநிலை மாற்ற துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக விளையாட்டு துறையில் ஒரு சரித்திர சாதனை படைக்கும் வகையில், 2022ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடத்துவதற்கான அனுமதியை முதல்வர் பெற்று தந்துள்ளார். தமிழக மக்கள், விளையாட்டு வீரர்கள் சார்பாக முதல்வருக்கு நன்றி. இதுவரை 43 முறை நடந்த உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஒரு போட்டி கூட இந்தியாவில் நடத்தப்படவில்லை. 44வது போட்டி தமிழகத்தில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உலக செஸ் போட்டி நடத்துவதால் உலகில் உள்ள 200 நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். இந்த போட்டி நடத்த 4 ஆண்டுகள் திட்டமிட்டு போட்டிகள் நடத்துவதற்கான பணிகள் நடத்த வேண்டும். 2022ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியுடன் சேர்ந்து பிடே காங்கிரஸ் தேர்தலும் நடைபெற உள்ளது என்ற கூடுதல் செய்தியும் கிடைத்திருக்கிறது. அதாவது, இந்தியாவில் கிட்டத்தட்ட 75 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். அதில் 25 கிராண்ட் மாஸ்டர்கள் தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் உள்ளனர். இந்தியாவின் சதுரங்க தலைநகரமாக சென்னை திகழ்கிறது.

2022ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை ரம்மியத்திலும், வங்க கடலின் அலை ஓசையிலும் நடக்கிறது. செஸ் போட்டியில் பங்கேற்று விளையாட மற்றும் பார்வையாளராக உலகத்தில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் மிக சிறப்பாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 2022ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தின் பாரம்பரிய இசை நிகழ்ச்சியோடு, தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாட்டோடு தொடக்க விழா நடைபெறும். செஸ் போட்டி ஜூலை 27ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்கும். உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு டீம் கொடுப்பார்கள். நாம் நடத்துவதால், இந்தியா சார்பில் 3 டீம் வீரர்கள் பங்கேற்பார்கள். போட்டி நடத்துவதற்கு செஸ் ஒலிம்பியா கமிட்டி குழு அமைத்து போட்டி நடத்தப்படும். உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: