பந்தலூர் படச்சேரி பகுதியில் காட்டு யானை சூறையாடியதில் பாக்கு மரம் உடைந்து விழுந்து வீடு சேதம்

பந்தலூர்:  படச்சேரி பகுதியில்  காட்டு யானை சூறையாடியதில் பாக்கு மரம் உடைந்து விழுந்து வீடு சேதமடைந்தது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி வனச்சரகத்தில் யானை, காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.  தற்போது, கோடை காலம் துவங்கியதால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு புல், செடி, கொடிகள் காய்ந்தும், நீர்நிலைகள் வறண்டும் காணப்படுகிறது. இதனால், வனவிலங்குகளுக்கு போதிய உணவு, தண்ணீர் கிடைக்காததால் குடியிருப்பு பகுதிக்கு படையெடுத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சேரங்கோடு படச்சேரி பகுதியில்  நுழைந்து காட்டு யானை ஒன்று வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. இதில், பாக்கு மரம் ஒன்று உடைத்து விழுந்ததில் மோகனா என்பவரது வீட்டின் சிமென்ட் சீட் கூரை  சேதமானது. இதனால், வீட்டில் இருந்தவர்கள் அச்சத்துடன் வெளியேறி சத்தமிட்டு யானையை விரட்டினர். சிறிது நேரம் அப்பகுதியில் முகாமிட்ட யானை அதன்பின் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. வனத்துறையினர் காட்டு யானைகளை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: