வருகிற ஏப்ரல் 6ம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை மே 10ம் தேதி வரை நடத்த முடிவு: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை:தமிழக சட்டப்பேரவை கடந்த 18ம் தேதி காலை 10 மணிக்கு கூடியது. அன்றைய தினம் தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து 19ம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பின்னர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது.இந்நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த வருகிற ஏப்ரல் 6ம் தேதி (புதன்) முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு கடந்த வாரம் அறிவித்தார். மேலும், எந்தெந்த தேதியில் என்னென்ன மானியம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்படும் என்பது குறித்து 30ம் தேதி (நேற்று) அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில், அவை முன்னவர் துரைமுருகன், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அதிமுக சார்பில் கொறடா எஸ்.பி.வேலுமணி, காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மவுலானா, பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கைகள் நடைபெறுவதற்காக சட்டப்பேரவை கூட்டம் வருகிற ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடர்ச்சியாக மே 10ம் தேதி வரை மானிய கோரிக்கைகளை நடத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 22 நாட்கள் பேரவை கூட்டம் நடைபெறும். ஒவ்வொரு நாளும் மதியம் 2 மணி வரை பேரவை கூட்டம் நடைபெறும்.

அதன்படி, ஏப்ரல் 6ம் தேதி (புதன்) - நீர்வளத்துறை

7ம் தேதி - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

8ம் தேதி - கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை

9 மற்றும் 10ம் தேதி விடுமுறை

11ம் தேதி - உயர் கல்வி துறை, பள்ளி கல்வி துறை

12ம் தேதி - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை

13ம் தேதி - வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால்வள துறை

14, 15, 16, 17ம் தேதி ஆகிய 4 நாட்கள் விடுமுறை.

18ம் தேதி - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு துறை

19ம் தேதி - நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு துறை

20ம் தேதி - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை

21ம் தேதி - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை

22ம் தேதி - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

23, 24ம் தேதி விடுமுறை

25ம் தேதி - வனத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை

26ம் தேதி - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை

27ம் தேதி - தொழில் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை

28ம் தேதி - கைத்தறி மற்றும் கதர்துறை, கதர், கிராம தொழில் மற்றும் கைவினை பொருட்கள், வணிக வரி மற்றும் பதிவுத்துறை

29ம் தேதி - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை

30 மற்றும் மே 1, 2, 3ம் ஆகிய தேதிகளில் பேரவை கூட்டம் இல்லை

3ம் தேதி - போக்குவரத்து துறை, இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்-நிர்வாகம், தகவல் தொழில்நுட்பவியல் துறை

5ம் தேதி - இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு

6ம் தேதி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

7ம் தேதி - காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை

8ம் தேதி - விடுமுறை

9ம் தேதி - காவல், தீயணைப்பு துறை மீது நடந்த விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை மற்றும் திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, நிதித்துறை, மனித வள மேலாண்மை துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்

10ம் தேதி - பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்து நிறைவேற்றுதல் மற்றும் ஏனைய அரசினர் அலுவல்கள் ஆகிய மானிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: