பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா?.. அல்லது 7 பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா?.. தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஏழு பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானமும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்விஎழுப்பியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்க கூடிய நளினி, முருகன் உள்ளட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, கடந்த அதிமுக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் நீண்டகாலமாக அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததால், ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி பரத் சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தமிழக வரலாற்றில் ஆளுநர் கடந்த 42 மாதங்களுக்கு மேலாக ஒரு கோப்பை நிலுவையில் வைத்துள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தின் மாறுறாம் வழக்கின் படி முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்றும் வாதிட்டார். அமைச்சரவையின் முடிவை ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் எப்படி விடுதலை செய்ய உத்தரவிட முடியும் என்று கேள்வியெழுப்பினார். ஏற்கனவே நளினி தொடர்ந்துள்ள வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் இது தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி 7 பேரையும் விடுதலை செய்வதற்காக 2018-ம் ஆண்டு அமைச்சரவை அளித்த பரிந்துரையை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளாரா, அல்லது பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்று தமிழக அரசு தெரிவிக்குமாறு உத்தரவிட்டு அந்த வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: