பறவை என்ற புதிய திட்டம் துவக்கம் சரியாக வழி நடத்தத் தவறினால் இந்தியா உக்ரைனாக மாறிவிடும் : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் பேச்சு

சென்னை: சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள  கலந்தாய்வு கூடத்தில் நேற்று நடைபெற்ற  நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதியரசர்  பிரகாஷ், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பறவை திட்டத்தை துவக்கி  வைத்தனர். இந்த புதிய  திட்டத்தின் முக்கியமான நோக்கம், மது, போதை மற்றும் கஞ்சா போன்ற தீய  பழக்கங்களுக்கு அடிமையான இளம் குற்றவாளிகளை அவர்களுக்கென தனியாக ஆலோசனை,  அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான ஆலோசனை, சட்ட உதவி, தொழில்  வழிகாட்டுதல், அவர்களது திறமையை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப பயிற்சி  வகுப்பு அளித்து தக்க வேலை வாய்ப்பு பெற உதவி செய்தல், வாழ்வை நலமாக்க  சிறையிலேயே முறையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கி, சமுதாயத்தில்  சரியான பாதையில் கொண்டு செல்ல அவர்களை நல்வழிபடுத்துவதாகும்.

விழாவில் நீதிபதி பிரகாஷ் பேசுகையில்: ஐபிஎல் மேட்ச் ஸ்கோரைப் போல் இல்லாமல், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியைப் பற்றிய செய்திகளை ஒவ்வொரு நாளும் நாங்கள் தேடுகிறோம். இந்தியாவில் 20 சதவீத இளைஞர்கள் உள்ளனர் என பதிவுகள் தெரிவிக்கின்றன.  அவர்களைச் சரியாக வழிநடத்தத் தவறினால், இந்தியா உக்ரைனாக மாறிவிடும். நமது உலகம் முன்பும், இப்போதும், எதிர்காலத்திலும் நியாயமாக இல்லை. இந்த சிறார்களின் வாழ்க்கையில் நாம் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும், நம் சமூகம் பயனடையும்’ என்றார். இத்திட்டத்தின் மூலம் பயிற்சிகள் வழங்க சிறைத்துறை, சமூக நல  பாதுகாப்பு துறை, தமிழ்நாடு மாநில சட்ட உதவிக்குழு, வேலை வாய்ப்பு மற்றும்  பயிற்சி துறை ஆகிய அரசு துறைகளில் இதற்கென ஒரு அலுவலரை நியமித்துள்ளனர்.

Related Stories: