வேதபுரீஸ்வரர் கோயிலில் ஜூலை 6ம் தேதி மகா கும்பாபிஷேகம்-ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏ தகவல்

செய்யாறு : செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் ஜூலை மாதம் 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதாக ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி தெரிவித்தார்.

செய்யாறு நகரில் திருவத்தூர் பகுதியில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலமான பாலாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயில் ₹1 கோடி மதிப்பீட்டில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு அறிவித்திருந்தது. திருப்பணிகள் மேற்கொள்வதற்காக  கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி கும்பாபிஷேக பணிக்கான பாலாலயம் நடந்தது.

தொடர்ந்து திருப்பணிகள் நடந்து வந்த நிலையில், சுமார் ஒரு ஆண்டிற்கு மேலாக கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடத்துவது தள்ளிப்போனது. செய்யாறு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குறுதியாக, திருவத்தூர் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்திட முயற்சிப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்திருந்தார். மேலும் எம்எல்ஏ ஒ.ஜோதியும் தொடர்ந்து அறநிலையத் துறை அமைச்சரிடமும் இதுகுறித்து வலியுறுத்தி வந்தார்.

இதுதொடர்பாக திருவத்தூர் ருத்ரப்பன் தலைமையில் 23 பேர் கொண்ட திருப்பணி கமிட்டியை அறநிலைத்துறை நியமித்தது. பின்னர், திருப்பணிக்குழு கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் வேதபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. எம்எல்ஏ ஒ.ஜோதி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, ஆய்வாளர் நடராஜன் செயல் அலுவலர் உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோயில் அலுவலக மேலாளர் திவாகர் வரவேற்றார்.

இதில் முன்னாள் நகரமன்ற தலைவர் என்.சம்பத் கவுன்சிலர்கள் கே.விஸ்வநாதன், கார்த்திகேயன், செந்தில், கங்காதரன், ஞானவேல் மற்றும் திருப்பணி கமிட்டி உறுப்பினர்களும், பிரம்மோற்சவ உபயதாரர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் வருகிற ஜூலை மாதம் 6ம் தேதி மாக கும்பாபிஷேகம் நடத்திட ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பங்கேற்க உள்ளதாக எம்எல்ஏ ஜோதி தெரிவித்தார். மேலும் அதிக அளவில் உபயதாரர்கள் கொண்டு மாவட்டத்தில் பிரம்மாண்ட அளவிலான கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என எம்எல்ஏ கேட்டுக்கொண்டார். முடிவில் கோயில் கிளர்க் ஜெகதீசன் நன்றி கூறினார்.

₹3 கோடியில் கோயில் திருமண மண்டபம்

செய்யாறு திருவத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் திருமண மண்டபம் ₹60 லட்சத்தில் சீரமைக்கவும், அதே பகுதியில் வணிக வளாகங்கள் ₹47.40 லட்சம் செலவில் அமைத்திடவும் அரசு நிதி ஒதுக்கீடு அளித்திருந்தது. இந்நிலையில் திருமண மண்டப கட்டிடம் உறுதித்தன்மை இல்லாததால் ₹3 கோடி செலவில் புதிய திருமண மண்டபம் அமைத்திட இந்த நிதி ஆண்டில் நிதி ஒதுக்கீடு அறிவிக்க பரிந்துரை செய்யப்பட்டதாகஎம்எல்ஏ ஜோதி தெரிவித்தார்.

Related Stories: