ரூ.440 கோடி திட்ட மதிப்பில் 116 இடங்களில் தூண்டில் வளைவு, கடல் அரிப்பு தடுப்பு சுவர்: நீர்வளத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தாக்கல்

சென்னை: பருவமழை காலங்களில் அலையின் சீற்றம் காரணம் கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகுவதை தடுக்க ரூ.440 கோடியில் 116 இடங்களில் தூண்டில் வளைவு, கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைப்பது தொடர்பாக நீர்வளத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 11 கடலோர மாவட்டங்கள் உள்ளது. இந்த கடலோர மாவட்ட பகுதிகளில் உள்ள மீனவ கிராமங்களில் பருவ மழைக்காலங்களில் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் உருவாகும்போது ஏற்படும் அலையின் சீற்றம் காரணமாக கடற்கரை பகுதியில் உள்ள மீனவ கிராமங்களுக்குள் நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலகட்டத்தில் மீனவ கிராமங்களில் கடல்நீர் உட்புகுவது தொடர்கதையாகி வருகிறது. சில நேரங்களில் கடல் அரிப்பால் வீடுகள் கடும் சேதமடைகிறது. இதை தடுக்கும் வகையில் கடல் அலை தாக்கத்தை குறைக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இதை தொடர்ந்து, கடந்த பருவமழையின் போது, தமிழகம் முழுவதும் 11 கடலோர மாவட்டப் பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தூண்டில் வளைவு மற்றும் கடலரிப்பு தடுப்பு சுவர் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து நீர்வளத்துறை சார்பில், பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அந்த பகுதிகளில் தூண்டில் வளைவு அமைப்பதா அல்லது கடலரிப்பு தடுப்பு சுவர் அமைப்பதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் ரூ.440 கோடியில் 116 இடங்களில் சிறியது முதல் பெரியதுமான தூண்டில் வளைவு மற்றும் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் கடல் அலையின் வேகத்தை குறைக்க முடிகிறது. இந்த திட்டம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விரிவான அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இயற்கை பேரிடர் காலகட்டங்களில் கடல் அலையின் வேகத்தை குறைக்கும் வகையில் கடல் அரிப்பு தடுப்பு சுவர், தூண்டில் வளைவு அமைப்பதால் கோடிக்கணக்கில் செலவு ஏற்படும் என்பதால் இதற்கு அரசு ஒப்புதல் அளிக்கவிட்டால், அதற்கு மாற்றாக செயற்கை முறையில் மணல் திட்டு அமைக்க தீர்மானித்துள்ளோம். அதாவது ஜியோ சிந்தடிக் என்ற நடைமுறையில் பலூன் மூலம் கடலில் மணல் திட்டுக்களை ஏற்படுத்தி அலையின் வேகத்தை குறைக்கும் புதிய திட்டம் உள்ளது. இந்த தூண்டில் வளைவு மூலம் கடல் அலையை தடுப்பது மட்டுமின்றி, வேறொரு இடத்தில் கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கிறது. இந்த தூண்டில் வளைவு 30 ஆண்டுகள் வரை எந்தவித சேதமடைவது கிடையாது. புயல் போன்ற இயற்கை பேரிடர் காலகட்டங்களில் தாங்கி நிற்கும். இந்த திட்டமும் கையில் உள்ளது. அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்’ என்றார்.

Related Stories: