கிறிஸ்தவ மிஷனரிகள் குறித்த மனு மதநல்லிணக்கத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்

புதுடெல்லி: மதநல்லிணக்கத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தனது மனுவை மனுதாரர் திரும்பப் பெற்று கொண்டார். கிறிஸ்தவ மதத்தின் சர்ச்சுகள், தங்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளை தவறான வழியில் பயன்படுத்துவதாகவும், அவர்களின் செயல்பாடுகள் தவறான வழியில் இருப்பதாகவும், இஸ்லாமிய கோயில்களை நிர்வகிக்க வக்ஃப் வாரியம் போன்றவை இருப்பது போல், கிறிஸ்தவ மிஷனரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வாரியம் அமைக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இம்மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இத்தகைய மனுக்கள் சமய, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், வெறும் விளம்பரத்துக்காகவே இதுபோன்று தாக்கல் செய்யப்படுகின்றன என கண்டனம் தெரிவித்தனர். ஒருவேளை, இம்மனுவை திரும்பப் பெறாவிடில், மனுதாரருக்கு ₹1 லட்சம் வரை அபராதம் விதிக்கக்கூடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து தனது மனுவை மனுதாரர் கே.கே.ரமேஷ் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

Related Stories: