பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் முன்பு நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு நடிகர் எஸ்.வி.சேகர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ்  நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இருந்த பொது பெண் பத்திரிகையாளர் ஒருவரை அவமதித்தது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலை பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

இது தொடர்பாக சென்னை காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டேவிட் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது எஸ்.வி.சேகர் தரப்பில் அமெரிக்காவில் இருக்க கூடிய ஒரு நபரின் கருத்தை தான் பகிர்ந்ததாகவும் , சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டதை நீக்கப்பட்டு மன்னிப்பு கேட்டக்கப்பட்டதாகவும், மற்றொரு முறை நீதிமன்றத்திலும் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் ஒரு முறை கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் ஏப்.2-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது பெண் பத்திரிக்கையாளர் குறித்து இழிவாக பதிவிட்ட அமெரிக்க வாழ் தமிழர் குறித்த அனைத்து விவரங்களை சம்பந்தப்பட்ட கவல்த்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று நடிகர் எஸ்.வி.சேகருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: