கிருஷ்ணராயபுரம் பகுதியில் பலத்த மழை கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் நனைந்து சேதம்-விவசாயிகள் கவலை

கிருஷ்ணராயபுரம் : கட்டளை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மணிகள் மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அருகே கட்டளையில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இங்கு செயல்பட்டு வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அரசு நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது.

ஆனால் இந்தாண்டு முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்த விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு விவசாயிகள் தங்களது நெல் மணிகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்முதல் நிலையத்தில் வைத்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக நெல் மூட்டைகள், தார்ப்பாய் மூலம் மூடி வைத்திருந்த நெல்மணிகள் நனைந்து சேதமாகி உள்ளன.

ஆன்லைன் மூலம் பதிவு செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பதிவு செய்து 20, 30 நாட்களுக்கு மேலாகியும் தங்களது நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படுவதாகவும் விவசாயிகள் கூறி வருகின்றனர்.

ஆனால் அதிகாரிகளிடம் கேட்கும்பொழுது விவசாயிகள் அதிக ஈரப்பதத்துடன் நெல் மூட்டைகள் கொண்டு வருவதால் சிறிது காலம் தாமதம் ஏற்படுவதாக கூறுகின்றனர். தமிழக அரசு ஆன்லைன் பதிவு செய்வதில் உள்ள குளறுபடிகளை நீக்கி கட்டளையில் சேமிப்புக் கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை வேண்டும் எனவும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க உடனடியாக அரசு சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து செல்ல வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

Related Stories: