சர்வதேச நிபுணர்களை கொண்டு முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய தேவையில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல்

டெல்லி: சர்வதேச நிபுணர்களை கொண்டு முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய தேவையில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது. இவ்வழக்குகள் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அணை பாதுகாப்பாக உள்ளது என விரிவான பதில் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிதாக 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கேரளா தரப்பில் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. முல்லை பெரியாறு அணை உறுதியாக இல்லை. அணை ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். சர்வதேச நிபுணர்கள் அடங்கிய சுதந்திரமான ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் எனவும் கேரள அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் முல்லை பெரியாறு அணை வழக்கில் கேரள அரசின் பதிலுக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளை செய்யவிடாமல் கேரள அரசு வேண்டுமென்றே தடுக்கிறது; சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை. அணை தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது; அணை பாதுகாப்பாகவே உள்ளது.

ஆய்வு செய்ய சர்வதேச குழு தேவையில்லை. ஒன்றிய நீர்வள ஆணையத்தின் ஒத்துழைப்போடு தமிழ்நாடு அரசின் குழுதான் அணையை ஆய்வு செய்யும் எனவும் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Related Stories: