கருமத்தம்பட்டி நகராட்சியில் 10 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மோசடி-நகராட்சி தலைவர் குற்றச்சாட்டு

சோமனூர் :  தரம் உயர்த்தப்பட்ட கருமத்தம்பட்டி நகராட்சியின் முதல் நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் நித்யா மனோகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது‌.

இக்கூட்டத்தில் ஆணையர் முத்துச்சாமி முன்னிலையில், துணைத்தலைவர் யுவராஜ் உட்பட 22 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, அலுவலகத்தின் முன்பு உள்ள காந்தி சிலைக்கு அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு மன்றக் கூட்டம் துவங்கியது. ஐந்து கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வரவில்லை.கூட்டத்தில், கருமத்தம்பட்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு வார்டுகளில் தார் சாலை கான்கீரிட் சாலை அமைத்தல், 27 வார்டுகளிலும் 200 தெரு விளக்குகள் அமைத்தல், அனைத்து வார்டுகளிலும் தினசரி குப்பைகளை சேகரித்தல், வணிக வளாக கடைகளை ஏலம் விடுவது, சிதிலமடைந்த தாட்கோ கடைகளை அகற்றுதல், குடிநீர் வசதி ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதன்பின், நகராட்சி தலைவர் நித்யா மனோகரன் கூறியதாவது:கருமத்தம்பட்டி பேரூராட்சியாக இருந்த போது கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. குறிப்பாக, பேரூராட்சியில் வீட்டுமனை அங்கீகாரம் வழங்க சதுர மீட்டருக்கு வசூலிக்க வேண்டிய கட்டணம் சதுர அடியில் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டு மனை அங்கீகாரத்திற்கு ரூ.30 ஆயிரம் வசூலிக்க வேண்டியதை ஒரு லட்சத்து 20 ஆயிரம் வசூலித்து உள்ளனர்.

தார் சாலை அமைத்தல், குடிநீர் இணைப்பு வழங்குதல், புதிய கட்டுமான பணிகள் என அனைத்து பணிகளிலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. வரும் காலங்களில் நகராட்சியின் 27 வார்டுகளுக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதில் முழு கவனம் எடுத்து செயல்படுத்தப்படும். மக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரியப்படுத்தினால் உடனடியாக நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாத இரண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், பாலாமணி, காங்கிரஸ் கட்சியின் கோவை புறநகர் மாவட்ட தலைவர் விஎம்சி.மனோகரன் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். திமுக நகர மன்ற தலைவர் பதவி விலகி காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் பதவியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Stories: