நகராட்சிக்கு ரூ.15 லட்சம் வரி பாக்கி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பொருட்கள் அதிரடி ஜப்தி: திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனம், மார்ச் 20: வரி பாக்கி ரூ.15 லட்சத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் செலுத்தாததால் அலுவலக பொருட்கள் ஜப்தி ெசய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் நகராட்சிக்கு ரூ.8 லட்சத்து 70 ஆயிரத்து 90 வரி பாக்கி செலுத்த வேண்டும். அதேபோல், சென்னை சாலையில் நகராட்சி இடத்தில் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவருக்கு ரூ. 7 லட்சத்து 24 ஆயிரத்து 446 செலுத்த வேண்டும். இவ்வாறு சுமார் ரூ.15 லட்சம் வரி பாக்கி உள்ளதாக தெரிகிறது. நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தவில்லை.  இதனால் நேற்று நகராட்சி ஆணையர் சவுந்தர்ராஜன் மற்றும் ஊழியர்கள், பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்து, அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்தனர். அவர்களிடம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திண்டிவனம் போலீசார் வரவழைக்கப்பட்டு, அங்கு ஜப்தி செய்த பொருட்களை எடுத்து சென்றனர். மேலும் இன்று அல்லது நாளை பிஎஸ்என்எல் நிறுவனம் மூடி சீல் வைக்கப்படும் எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: