பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கினாரா சந்திரபாபு நாயுடு?.. மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு

கொல்கத்தா: பெகாசஸ் உளவு மென்பொருளை தயாரித்த நிறுவனம் அதனை ரூ.25 கோடி ரூபாய்க்கு மேற்கு வங்க அரசுக்கு விற்க முயன்றதாக திடுக்கிடும் தகவலை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெகாசஸ் உளவு மென்பொருளை சட்டவிரோதமாக பயன்படுத்தி 300க்கும் மேற்பட்டார் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. பெகாசஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் மம்தா பானர்ஜி தற்போது புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் 4 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க காவல்துறையை அணுகி பெகாசஸ் உளவு மென்பொருளை ரூ.25 கோடி ரூபாய்ககு விற்க முன்வந்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த தகவல் தனக்கு தெரிய வந்த போது அது தேவையில்லை என கூறிவிட்டதாக மம்தா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்தையும் அந்நிறுவனம் தொடர்பு கொண்டதாகவும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது பெகாசஸ் வாங்கப்பட்டதாகவும் மம்தா குற்றம் சாட்டினார்.

சந்திரபாபுவின் மகனும் தெலுங்கு தேசம் ஆட்சியில் ஆந்திர தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான இருந்தவருமான நரலோகேஷ் மம்தாவின் கூற்றை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மம்தா எந்த அடிப்படையில் பேசுகிறார் என்று புரியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: