சென்னை நகரை சுற்றியுள்ள 5 சுங்க சாவடிகளை நீக்க வேண்டும்: நிதின் கட்கரியிடம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்

புதுடெல்லி: பொதுமக்களுக்கு பாதிப்பாக இருக்கும் பரனூர், சென்னச் சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய பகுதிகளில் உள்ள 5 சுங்க சாவடிகளை நீக்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் வலியுறுத்தியுள்ளார்.

அரசு முறை பயணமாக டெல்லி சென்ற தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று டெல்லியில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் சாலை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனறு வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து நேற்று காலை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒன்றிய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் தமிழக சாலைகள் திட்டம் தொடர்பாக 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரையிலான சாலையை 8 வழி சாலையாக அகலப்படுத்துதல், சென்னை தடா சாலையில் மாதவரம் சந்திப்பு முதல் சென்னை வெளிவட்ட சாலை வரை 6 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும்.

திருச்சி முதல் துவாகுடி வரை உயர்மட்ட சாலை, தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையில் உயர்மட்ட சாலை, வாலாஜா-பூந்தமல்லி சாலையில் மதுரவாயல் சந்திப்பு முதல் பெரும்புதூர் சுங்கசாவடி வரை 6 வழித்தட உயர்மட்ட சாலை அமைத்தல், கோவை-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை அமைத்தல், கோயம்பத்தூர் நகரின் அரைவட்ட சாலை, திருச்சியில் நகர்வட்ட சாலை, முன்னதாக கொள்கை அளவில் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்ட 8 சாலைகளுக்கு உரிய அறிவிக்கையை இந்திய அரசிதழில் வெளியிட வேண்டும்.

நகராட்சி, மாநகராட்சிக்கு எல்லைக்குள் இயங்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஐந்து சுங்க சாவடிகளை உடனடியாக நீக்க வேண்டும். ஏனெனில், இது மக்கள் மத்தியில் மிகபெரிய பிரச்னையாக உள்ளது. அன்றாட பணிகளுக்கு செல்லும் மக்கள் இந்த சுங்க சாவடியால் பாதிப்படைகின்றனர். குறிப்பாக, பரனூர், சென்னச் சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 பகுதிகளில் உள்ள சுங்க சாவடிகளை நீக்க வேண்டும். அதேபோல், தமிழகத்தில் புதிய சாலைகளை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நடப்பாண்டில் எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் நிலுவையில் இருந்த 90 சதவீத பணிகள் இப்போது முடிக்கப்பட்டுள்ளது. வன இலாகா பிரச்னை இம்மாதத்திற்குள் தீர்க்கப்படும். அதனால், ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவாக முடிக்க ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும். பல சாலைகள் நிலுவையில் உள்ளது.

குறிப்பாக, திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலை கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், மதுரவாயல் திட்டத்தை பொறுத்தவரையில் ஒன்றிய அரசின் முன்னாள் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த போதும், அதேபோல், தமிழகத்தில் கலைஞர் முதல்வராக இருந்த போதும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்கள் காட்டி கடந்த அதிமுக ஆட்சியில் அப்படியே கைவிடப்பட்டது.

தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மக்கள் பிரச்னை மற்றும் பயன்பாடுகளை அடிப்படையாக கொண்டு இரட்டை அடுக்கு பாலம் கொண்ட சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில், மேம்பாலத்தை பொறுத்த வரையில் மதுரவாயல்-துறைமுகம் வரையிலும், கீழ்பாலம் கோயம்பேடு-நேப்பியர் பாலம் வரை இணைக்கப்பட உள்ளது. 13 இடத்தில் இறங்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பான திட்ட மதிப்பீடு முடிந்துள்ளது.

ஓரிரு மாதத்தில் இது சார்ந்த பணிகள் நடைபெறும். சென்னையை இணைக்கும் செங்கல்பட்டு பாலமும் விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அமைச்சரின் இந்த அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து விரைவில் அதுசார்ந்த பணியை விரைவில் செய்து முடிக்கிறோம் என்று கட்கரி உறுதியளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: