இந்தியாவை நவீனமயமாக்கும் இலக்கை மறந்து விடாதீர்கள்: ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை

டேராடூன்: ‘இந்தியாவை நவீனமயமாக்கும் மற்றும் தன்னிறைவு நாடாக மாற்றும் இலக்கை மறந்து விடாதீர்கள்,’ என்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம், முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனத்தில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்து கொண்டார். இங்கு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி பேசியதாவது:

கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள சூழலில் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்றுநோக்கி வருகின்றது. புதிய உலகுக்கான செயல்முறை உருவாகி வருகின்றது. இந்த புதிய செயல்முறைப்படி இந்தியா தன்னைத்தானே விரைவாக வளர்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்றுக்கு பின் வரும் புதிய உலக செயல்முறையில் இந்தியா மிகப்பெரிய பங்கு வகிக்க வேண்டும். தற்போதுள்ள பயிற்சி அதிகாரிகள் நாட்டின் அடுத்த 25 ஆண்டு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பார்கள். பல முறை நான் பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருக்கின்றேன். ஆனால், நீங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள்.

நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டில் நீங்கள் உங்கள் பணியை தொடங்குகிறீர்கள். நாடு 100வது சுதந்திர தினத்தை நிறைவு செய்யும்போது நீங்கள் சேவைப்பணியில் இருப்பீர்கள். இந்தியாவை நவீனமயமாக்கும் மற்றும் தன்னிறைவு நாடாக மாற்றும் இலக்கை மறந்து விடாதீர்கள். அதிகாரிகள் ஒருபோதும் சேவை உணர்வையும், கடமை உணர்வையும் தளரவிடக் கூடாது. இந்த இரண்டு பண்பையும் இழக்கிறீர்களா என உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். அதிகாரம் மற்றும் அதிகார உணர்வு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தீங்கு விளைவிக்கும். சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற குறிக்கோளை நாடு அடுத்த கட்டத்திற்கு கொண்டு  செல்ல வேண்டும் என்பதை எப்போம் மனதில் கொள்ளுங்கள். நீங்கள் களத்தில் இறங்கும்போது சமூக ஏணியின் அடிமட்டத்தில் இருக்கும் மனிதனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நீங்கள் நினைக்கும் முடிவை எடுப்பதற்கு தயக்கம் காட்டக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: