திருப்புவனம் அருகே களைகட்டிய கிடாய் முட்டு-60 முறை முட்டியும் அசராமல் ஆட்டம்

திருப்புவனம் : திருப்புவனம் அருகே 5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கிடாய் முட்டு களைகட்டியது.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று கிடாய் முட்டு நடந்தது. மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய் ஜோடிகள் கலந்துகொண்டன. இதில் அதிக முறை முட்டி எதிராக உள்ள கிடாயை வீழ்த்திய கிடாக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மோதலுக்கு 60 முட்டுக்கள் நிர்ணயிக்கப்பட்டன. அதற்குள் சோர்ந்துவிடும் கிடாய்கள் தோற்றதாக அறிவிக்கப்பட்டன.

மதுரை அனுப்பானடியை சேர்ந்த முனீஸ் என்பவரின் கிடாயும், வெள்ளியங்குன்றம் நாகேந்திரன் வளர்த்த கிடாயும் விடாது தொடர்ந்து 60 முறை ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. அசத்தலாக விளையாடிய 2 கிடாய்களுக்கும் 6 அடி உயர பீரோக்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், பித்தளை அண்டா, எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.

மதுரை மாவட்ட ஆட்டுகிடாய் சண்டை சங்க தலைவர் கீரைத்துறை பூப்பாண்டி கூறுகையில், ‘‘கிடாய் முட்டுக்கு கோர்ட் தடை விதித்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொட்டப்பாளையம் இளைஞர்கள் சங்கத்தினர் உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கிடாய் முட்டு போட்டியை நடத்தியுள்ளனர். ஜல்லிக்கட்டை போல கிடாய் முட்டு போட்டிகளை தொடர்ந்து நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: