கனிம வளங்களை சிறப்பாக கையாளுவதன் மூலம் வரி அல்லாத வருவாயாக ரூ.1,78,470 கோடி ஈட்ட திட்டம்; பாமக 20வது நிழல் நிதி அறிக்கை வெளியீடு

சென்னை: கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம் வரி அல்லாத வருவாயாக ரூ.1,78,470 கோடி ஈட்ட திட்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அடங்கிய 20வது நிழல் நிதி அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டார்.

பாமக நிழல் நிதி அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட பல பாமக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிறுவனர் ராமதாஸ் 2022-23ம் ஆண்டுக்கான நிழல் நிதி அறிக்கையை வெளியிட்டார்.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.1,78,470 கோடி ஈட்ட திட்டம். அடுத்த 4 ஆண்டுகளில் தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை ரூ.32 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும். ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.  2022-23ம் ஆண்டில் அரசுத் துறைகளில் 20 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஏற்கெனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகம்  உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக மாற்றப்படும். தமிழ்நாட்டில் 5 இடங்களில் ஐ.ஐ.டிக்கு இணையான தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்படும்.  தமிழ்நாட்டில் மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு டிஜிபி நிலை அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: