தேக்கடியில் உள்ள பணியாளர் குடியிருப்பில் பராமரிப்பு மேற்கொள்ள கேரளா இடையூறு: ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையை நிர்வாகம் செய்ய ஏதுவாக தேக்கடியில் தமிழ்நாடு பொதுப் பணித் துறையின் உப கோட்ட அலுவலகம் உள்ளது. இதனையொட்டி, பணியாளர் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை உள்ளன. இவற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தேவையான பொருட்களை கொண்டு சென்றபோது, தேக்கடி நுழைவுப் பகுதியில் உள்ள கேரள சோதனைச் சாவடியில் அம்மாநில வனத் துறையினர் அனுமதிக்கவில்லை. இதனால்பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் அங்கேயே நாட் கணக்கில் நிறுத்தக்கூடிய துர்ப்பாக்கிய சூழ்நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. கேரள அரசின் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கேரள அரசின் செயலை தட்டிக் கேட்பதோடு, இதனை கேரள முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற இடையூறுகளை தடுத்து நிறுத்தவும், எவ்வித தயக்கமுமின்றி தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: