இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம்

புதுடெல்லி: உக்ரைனில் செயல்பட்டு வந்த இந்திய தூதரம் தற்காலிகமாக அண்டை நாடான போலந்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் தற்போது எந்த நகரமும் பாதுகாப்பான பகுதியாக இல்லை. ஆரம்ப கட்ட போரின் போது, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளின் எல்லையை ஒட்டிய லிவிவ் போன்ற நகரங்கள் பாதுகாப்பான பகுதிகளாக இருந்தன. அந்நகரங்கள் வழியாக இந்திய மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வந்தனர்.

உக்ரைனில் படித்து வந்த இந்திய மாணவர்கள் உட்பட சுமார் 21,000 பேரை ஒன்றிய அரசு மீட்டு பத்திரமாக அழைத்து வந்துள்ளது. நாடு திரும்ப விருப்பம் தெரிவித்த அனைத்து இந்தியர்களும் உக்ரைனில் இருந்து பத்திரமாக அழைத்து வரப்பட்டு விட்டனர். இந்நிலையில், தற்போது போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளதால், உக்ரைனில் நிலைமை மிகவும் மோசமடைந்து இருக்கிறது. எனவே, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக அண்டை நாடான போலந்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், ‘உக்ரைனில் பாதுகாப்பு சூழ்நிலை மோசமடைந்து வருவதாலும், மேற்கு பகுதியில் தொடர் தாக்குதல் நடப்பதாலும், அந்நாட்டிற்கான இந்திய தூதரகத்தை தற்காலிகமாக போலந்து நாட்டிற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் தூதரகத்தை இடமாற்றம் செய்வது குறித்து மறு ஆய்வு செய்யப்படும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: