தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்தி பசுமை சூழலை உருவாக்குவது வருங்கால தலைமுறைக்கு அத்தியாவசியமாகும்: கலெக்டர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமை சூழலை உருவாக்குவது இன்றைய மனித குலத்திற்கு மட்டுமல்ல, நம் வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்று கலெக்டர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முதன் முறையாக மாவட்ட கலெக்டர், காவல் துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் கடந்த 10ம் தேதி (வியாழன்) தொடங்கியது.

முதல் நாள் மாநாட்டில் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்ற கூட்டு கூட்டமாக நடைபெற்றது. அன்று மாலை போலீஸ் அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. முதல்நாள் மாநாட்டின் முடிவில், தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார். நேற்று முன்தினம் 2வது நாள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மட்டுமே பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று 3வது நாள் மாநாடு சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்புரை ஆற்றினார். இதில் அனைத்து அமைச்சர்கள், துறை செயலாளர்கள், வனத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நேற்று 3வது நாள் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:மாநில முன்னேற்றத்திற்கு நிலையான வளர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். அதேபோல், சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையும் உங்கள் அனைவருக்கும் அதிகமாக இருக்கும் என நான் நம்புகிறேன். இந்த அரசை பொறுத்தவரைக்கும், தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் இரண்டையும் ஒரே தராசில் இருக்கக்கூடிய இரு தட்டுகள் போலவே கருதுகிறது. இன்று புவி வெப்பமாகுதல் நாட்டு அளவில் அல்ல, உலக அளவில் அதிகமாக பேசப்படுகிறது. அதற்காக இலக்குகள் நிர்ணயிக்கப்படுகிறது.

வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமை சூழலை உருவாக்குவது இன்றைய மனித குலத்திற்கு மட்டுமல்ல, நம் வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.என்னை பொறுத்தவரை எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, சுற்றுச்சூழலை மனதில் வைத்துக்கொண்டு அப்போதே நாங்கள் மரக்கன்றுகள் எல்லாம் நட்டோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். அதை மனதில் வைத்துக்கொண்டு தான், இந்த அரசு பொறுப்பேற்றவுடன் முதலில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை என்கின்ற பெயரை இதற்காக சூட்டினோம். அத்துடன் நிற்காமல் பிளாஸ்டிக்கை ஒழிக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்தோம். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் நேர்மையான, வெளிப்படையான அனுமதி முறைக்கு வித்திட்டிருக்கிறோம்.

இப்போது முதல் முறையாக மாவட்ட கலெக்டர்களோடு சேர்ந்து மாவட்ட வன அலுவலர் மாநாட்டையும் நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு வரைவு அறிக்கை 2020 குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஆகவே, தொழில், சுற்றுச்சூழல் இரண்டும் சமுதாயத்தினுடைய சம நண்பர்கள் என்ற அளவிலே முன்னெடுத்துச் செல்ல தேவையான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை, தொழில் துவங்க அனுமதிக்கப்படும் அனுமதிகளை இன்னும் விரைவுபடுத்தும் ஆலோசனைகளை நீங்களெல்லாம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூட்டம், நேற்று பிற்பகல் வரை நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக, தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார். இதையடுத்து சென்னையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கலெக்டர்கள், காவல் துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாடு நிறைவு பெற்றது.

* கலெக்டர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய முதல்வர்

சென்னை, தலைமை செயலகத்தில் கடந்த 10ம் தேதி (வியாழன்) கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் 3 நாள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மூன்று நாட்களாக நடைபெற்ற மாநாடு, நேற்று பிற்பகலுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, மாநாட்டில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதிய உணவு அருந்தினார். அதில், சேலம் கலெக்டர் கார்மேகம், சிவகங்கை கலெக்டர் மதுசூதன், தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி, அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோருடன் ஒரே டேபிளில் அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் முதல்வரை சந்தித்து விட்டு, தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பி சென்றனர்.

Related Stories: