அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பொருட்கள் திருட்டு 2 இன்ஜினியர்கள் கைது: ரூ.10 லட்சம் பொருட்கள் மீட்பு

ஆவடி: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், திருமலைவாசன் நகரில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிட பணிக்கு தேவையான கட்டுமான பொருட்களை அங்குள்ள ஒரு அறையில் சேமித்து வைத்துள்ளனர். இதற்கிடையில், சமீபத்தில் அறையில் உள்ள கட்டுமான பொருட்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, அங்கிருந்த கதவு, ஜன்னல், பெயிண்ட், எலக்ட்ரிக்கல் பொருட்கள் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான கட்டுமான பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, தனியார் கட்டுமான நிர்வாகம் அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு லாரியில் கட்டுமான பொருட்களை திருடி இரு நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து தனியார் நிறுவன மேனேஜர் செல்வராஜ்(41)  என்பவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், பழனி ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் இன்ஜினியர்கள் ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகர், முதல் தெரு சார்ந்த சுப்பிரமணியம் (45), வேலூர் மாவட்டம், காட்டுப்புதூர் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவைச் சார்ந்த நவீன்குமார் (30) ஆகியோர் கட்டுமான பொருட்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த இருவரையும் நேற்று பிடித்தனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் இருவரும் கட்டுமான பொருட்களை லாரி மூலம் திருடி மிட்டனமல்லியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, போலீசார் வீட்டிற்கு சென்று ரூ.10லட்சம் கட்டுமான பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் சுப்பிரமணியம், நவீன்குமார் இருவரையும் கைது செய்தனர்.

Related Stories: