திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா கோலாகலம்-1000 ஆடுகளின் ரத்தத்தை குடித்து பரவசம் ஏற்படுத்திய மருளாளி

திருச்சி : திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. நேர்த்திக்கடனாக 1,000 ஆடுகள் பலியிடப்பட்டது.

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஆறு கண் பாலம் அருகில் அமைந்து உள்ளது குழுமாயி அம்மன் கோவில். சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குட்டி குடித்தல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த பிப்ரவரி 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 7ம் தேதி இரவு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மறுநாள் இரவு காளியாவட்டம் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது பக்தர்கள் அம்மனை கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க தேரில் புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர்.

இதற்கிடையில் நேற்றுமுன்தினம் சுத்த பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் நேற்று (10ம் தேதி) காலை வெகு விமரிசையாக நடந்தது. இதனையொட்டி புத்தூர் மந்தையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அம்மனின் அருள் பெற்ற மருளாளியை (சாமி ஆடுபவர்) பக்தர்கள் மேளதாளம் முழங்க தோளில் தூக்கி வந்தனர். அப்போது கொம்பு உள்ளிட்ட வாத்தியங்களும் இசைக்கப்பட்டது.

பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வந்திருந்த ஆடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மந்தைக்கு முன் உள்ள தேரின் அருகில் மருளாளி வந்ததும் ஆடுகள் மருளாளியிடம் தூக்கி கொடுக்கப்பட்டது. மருளாளி அவற்றின் கழுத்தை கடித்து ரத்தத்தை உறிஞ்சி குடித்தது பரவசத்தை ஏற்படுத்தியது. முதலில் அரசு சார்பில் மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட ஆட்டு குட்டியின் ரத்தத்தை குடித்தார். கோயிலில் 1,100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. முன்னதாக குட்டி குடித்திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (11ம்தேதி) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை (12ம்தேதி) சாமி குடிபுகுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

Related Stories: