மீண்டும் பணி வழங்க கோரி கார் கம்பெனி புகை கூண்டில் ஏறி மாஜி ஊழியர்கள் தற்கொலை மிரட்டல்: சூளகிரி அருகே பரபரப்பு

சூளகிரி: சூளகிரி அருகே மீண்டும் பணி வழங்க கோரி, கார் கம்பெனி புகை கூண்டில் ஏறி மாஜி ஊழியர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள குண்டுகுருக்கி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கார் கம்பெனி உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் இக்கம்பெனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இங்கு, வாணியம்பாடியை சேர்ந்த விஜயகாந்த் (33), தர்மபுரி மாரண்ட அள்ளியை சேர்ந்த வெங்கடேஷ் (28), சூளகிரி மேடுப்பள்ளி கிருஷ்ணன் (32), காவேரிப்பட்டணம் சத்யராஜ் (28) உட்பட 15 பேர் 2016ம் ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரி நிர்வாகத்திடம் தகராறு செய்ததால், அவர்கள் 15 பேரையும் பணி நீக்கம் செய்தனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 15 பேரும் கார் கம்பெனிக்கு வந்தனர். இதில், விஜயகாந்த், வெங்கடேஷ், கிருஷ்ணன், சத்யராஜ் ஆகிய 4 பேரும் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர். பின்னர், அங்கிருந்த புகை கூண்டில் ஏறிய அவர்கள் தங்களை மீண்டும் பணியில் சேர்த்து கொள்ள வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்தனர். மீதமுள்ள வாலிபர்கள் கம்பெனி நுழைவுவாயிலில் நின்று கொண்டு பணி வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கம்பெனி நிர்வாகத்தினர் சூளகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவயிடம் வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, மேலே ஏறிய வாலிபர் களில் விஜயகாந்த் என்ற வாலிபர் கீழே இறங்கினார். தொடர்ந்து மற்ற 3 பேரும் கீழே இறங்கினர். பின்பு கம்பெனி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: