செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பாலமாக செயல்பட வேண்டும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தல்

சென்னை: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை  பொதுமக்களிடையே கொண்டு செல்லும் பாலமாக செயல்பட வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் தஞ்சாவூர் மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை  செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) அம்பலவாணன் மற்றும் கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், உதவி  இயக்குநர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி குறித்து அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தஞ்சாவூர் மண்டலத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ளடங்கி இருக்கக் கூடிய ஏற்கனவே அமைக்கப்பட்ட சிலைகள், நினைவகங்கள் மற்றும் மணிமண்டபங்கள், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள், மொழிக் காவலர்களின் சிலைகள், அரங்கங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டங்களில் உள்ள மணிமண்டபங்கள், சிலைகள் நல்ல முறையில் பராமரித்திட வேண்டும். நினைவகங்கள் குறித்து சாலைகளில் முன்கூட்டியே பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெயர்ப் பலகைகள் அமைக்க வேண்டும். முதலமைச்சரின் நிகழ்ச்சிகள், விழாக்கள் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள், நேரலைக் காட்சிகள் மற்றும் அரசாணைகள் இவைகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களின் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றம் செய்து பொதுமக்கள் அதிகளவில் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் பாலமாக செயல்பட்டு சிறப்பாக பணி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

Related Stories: