அமெரிக்க நிதிஉதவியில் செயல்படும் ஆய்வகம்; உக்ரைனில் ‘பயோ வார்’ ஆவணங்கள் சிக்கியது..! ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பகீர் தகவல்

மாஸ்கோ: அமெரிக்க நிதிஉதவியில் உக்ரைனில் செயல்படும் ஆய்வகத்தில் இருந்து உயிரி தாக்குதலை ஏற்படுத்தும் ஆவணங்கள் சிக்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த உக்ரைன் மீது தற்போது ரஷ்யப் படைகள் போர் தொடுத்துள்ள நிலையில், அங்கு அணு ஆயுத அச்சம் நிலவி வருகிறது. உக்ரைனில் உள்ள இரண்டு அணு சக்தி மையங்களை ரஷ்யப் படைகள் நிர்மூலமாக்கின. அதனால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படுமா? என்ற அச்சம் உலக மக்களிடம் உள்ளது. ரஷ்ய எல்லையில் அமெரிக்க பாதுகாப்பு துறையின் நிதிஉதவியில் உக்ரேனிய உயிரியல் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆய்வகங்களில் உயிரியல் ஆயுதங்களின் (கொடிய நோய்களை பரப்பும் கிருமிகளை உயிரி ஆயுதங்களாக பயன்படுத்தும் பயங்கரவாத தாக்குதல் முறை) கூறுகள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மேற்கண்ட ஆய்வகங்களில் இருந்து உயிரியல் ஆயுதங்களை உருவாக்கும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செய்தியை ‘ரென் டிவி’ வெளியிட்டுள்ளது. அதில், ‘பிளேக், ஆந்த்ராக்ஸ், துலரேமியா, காலரா மற்றும் பிற கொடிய நோய்களை பரப்பும் ஆபத்தான நோய்க்கிருமிகளை, அவசரகால அழிவுக்கு பயன்படுத்துவது தொடர்பான ஆவணங்களை உக்ரைனிய உயிரியல் ஆய்வகங்களின் ஊழியர்களிடமிருந்து கடந்த பிப்ரவரி 24ம் தேதி நாங்கள் பெற்றுள்ளோம் என்று ரஷ்ய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டான்பாஸில் ரஷ்ய ராணுவம் நேரடி நடவடிக்கை தொடங்கிய போது, உக்ரைன் எல்லையில் செயல்பட்ட ரகசிய உயிரியல் பரிசோதனைகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

தற்போது சிக்கியுள்ள ஆவணங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆய்வகத்தில் ஏதேனும் கதிர்வீச்சு, ரசாயன மற்றும் உயிரியல் அச்சுறுத்தல் உள்ளதா? என்பது குறித்து ரஷ்ய நிபுணர்கள் பகுப்பாய்வு செய்து வருகின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பாக்டீரியோலாஜிக்கல் (உயிரியல்) மற்றும் நச்சு ஆயுதங்களை தடை செய்வது தொடர்பான ஐ.நா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுதொடர்பாக உக்ரேனிய சுகாதார அமைச்சகம் அனைத்து உயிரியல் ஆய்வகங்களுக்கும் ஒரு அறிவுறுத்தலை அனுப்பியது. ஆபத்தான நோய்க்கிருமிகளின் சேமிக்கப்பட்ட இருப்புகளை அவசரமாக அகற்றுமாறு அந்த அறிவிப்பில் கூறியுள்ளது. இவ்வாறு வெளியிடப்பட்ட ஆவணங்களின் பட்டியலில் பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட உத்தரவும் அடங்கும். உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையமானது, வெடிகுண்டு தயாரிப்பதற்கும், புளூட்டோனியத்தைப் பிரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதாக ரஷ்யா நிபுணர்கள் கூறியுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: