தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ்மாக் மதுபானங்கள் விலை ரூ.80 வரை உயர்வு; இன்று முதல் அமலாகியது

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் 4,300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிபக் கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. அரசின் வருவாயை அதிகரிப்பதில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதாரண நாட்களில் ரூ.90 முதல் ரூ.110 கோடி வரையிலும், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் ரூ.500 கோடி வரையிலும் மதுவிற்பனை அதிகரித்து காணப்படும். அதன்படி, ஆண்டுக்கு டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.31 ஆயிரம் கோடி வரையிலும் வருவாய் கிடைக்கும். கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுபான விலை உயர்த்தப்பட்டது. அப்போது, குவாட்டர் ரூ.10ம், ஆப் ரூ.20ம், புல் ரூ.40ம் விலை அதிகரித்தது. பீர் பாட்டிலுக்கு ரூ.10ம் விலை உயர்த்தப்பட்டது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில், 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது மற்றும், பல்வேறு துறைகளில் சிறப்பு திட்டங்களை அறிவிப்பது, துறை வாரியாக நிதி ஒதுக்கீடு, புதிய தொழில்களை ஊக்கப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில், மதுவிலக்கு ஆயதீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.  இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மதுபான விலையை உயர்த்தி அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மதுபானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.10ம், மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20ம், ஆப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.20ம், மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.40, புல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40ம், மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும் விலை உயர்த்த பட்டுள்ளது. பீர் வகைகளுக்கு தற்போது உள்ள விலையை விட கூடுதலாக ரூ.10 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி, இந்த புதிய விலைப்பட்டியலை இன்று காலை 8 மணி அளவில் மேற்பார்வையாளர்கள் அலுவலகத்தில் கடை விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பெற்றுக்கொண்டனர். இதேபோல், நேற்றைய தேதியின் இருப்பு பட்டியலை பிராண்ட் வாரியாக பிரித்து பேக் செய்து அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் மாற்றியமைக்கப்பட்ட விலையில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறதா பழைய இருப்பு பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.மேலும், மாற்றியமைக்கப்பட்ட விலை பட்டியலை பார்வையில் படும்படி ஒவ்வொரு டாஸ்மாக் கடையின் முன்பாக வைத்திருக்க வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய விலை உயர்வு மூலம் அரசுக்கு ஒரு நாளைக்கு மதுவகைகளுக்கு ரூ.10.35 கோடியும், பீர் வகைகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.1.76 கோடியும் கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,396 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: