முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு: நாளை விசாரணை பட்டியல் தயாரானதால் அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாளைய வழக்குகளுக்கான பட்டியல் தயாராகிவிட்டதால், ஜெயக்குமார் மனு வரும் வியாழக்கிழமை பட்டியலிடப்படும் என நீதிபதி விளக்கம் அளித்தார். சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தி.மு.க., பிரமுகரை தாக்கிய வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க கிழமை நீதிமன்றம் மறுத்து விட்டதால் அவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே நேற்று அவரை மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: