ஒடுகத்தூர் பேரூராட்சியில் ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்-கூடுதல் பஸ் இயக்க பெற்றோர்கள் கோரிக்கை

ஒடுகத்தூர் :  ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட  ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஏறக்குறைய 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் நாள்தோறும் தங்களின் அன்றாட தேவைகளுக்கும், பணி நிமித்தமாகவும், வியாபார நோக்கத்திற்காகவும் ஒடுகத்தூர் பஸ் நிலையம் வந்து தான் வேலூர், ஆம்பூர், குடியாத்தம் என மற்ற பெரு நகரங்களுக்கு செல்ல வேண்டும். அதேபோல், ஒடுகத்தூரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த 2 பள்ளிகளில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்களும், இங்கு வந்து தான் பஸ்சில் சென்று வர வேண்டும். ஆனால், மேலரசம்பட்டு, கீழ்கொத்தூர் போன்ற பல்வேறு கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. இதனால், பள்ளி மாணவர்கள் ஆபத்தான நிலையில் பஸ் படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். இதனால், அவ்வப்போது, விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நடக்கிறது. எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: