‘உங்களில் ஒருவன்’ - தன் வரலாறு மு.க.ஸ்டாலின் எழுதிய நூலை ராகுல் வெளியிட்டார்: கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ தன் வரலாற்று நூலை நேற்று சென்னையில் ராகுல் காந்தி வெளியிட்டார். இந்த விழாவில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் (பாகம் 1) தன் வரலாற்று நூலின் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று மாலை 4 மணிக்கு நடந்தது.

இந்த விழாவில் கலந்து கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள்  முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி  யாதவ் உள்ளிட்டோர் சென்னை வந்திருந்தனர். விழாவுக்கு வருகை தந்த ராகுல் காந்தி உள்ளிட்ட வடமாநில தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா அரங்கின் வாயிலில் நின்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி முன்னிலை வகித்தார். திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி வரவேற்புரையாற்றினார். மேலும், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்த்தாய் வாழ்த்து டன் விழா தொடங்கியது. திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமாக உதயநிதி ஸ்டாலின் மேடையில் இருந்த அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்தினார். இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூலை வெளியிட திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக்கொண்டார். முன்னதாக, கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைத்த இல்லத்தில் இருந்து ராகுல்காந்தி புத்தகத்தை எடுத்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை, ராகுல் காந்தி மேடையில் இருந்த பிரனாயி விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பிற தலைவர்களுக்கும் வழங்கினார்.

இதையடுத்து கனிமொழி எம்பி, நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து, டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் துரைமுருகன், பினராயி விஜயன், உமர்அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பேசினர். பின்னர், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உணர்ச்சிமிகு உரையாற்றினார். இதைத்தொடர்ந்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். முன்னதாக, நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்த ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, விழா மேடையில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா சிறப்பு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலில் அவரது பள்ளி, கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் பொதுக்கூட்டம், அந்த கால கட்டத்தில் அவர் பொதுக்கூட்டங்களில் பேசியது, தமிழ் சினிமாவில் அவர் நடித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தில் பட்ட கஷ்டங்கள் என 1953 மார்ச் 1ம் தேதி அவர் பிறந்தது முதல் 1976ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தில் தனது சுயசரிதையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார். குறிப்பாக 1976ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவங்கள் குறித்தும் இந்த நூலில் அவர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மு.க.ஸ்டாலின் சிறு வயது எண்ணங்கள், கலைஞரின் அன்பில் திளைத்த தருணங்கள், அரைக்கால் சட்டை பருவத்தில் திமுக கொடியேந்தி கழகத்திற்காக பணியாற்றிய தருணம் உள்ளிட்ட அனுபவங்களை அவர் கூறி உள்ளார். இந்த நூலின் முதல் பாகம் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில், தமிழகத்தை சேர்ந்த அனைத்து அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், மல்லிகா மாறன், துர்கா ஸ்டாலின் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், முக்கிய விஐபிக்கள் என சுமார் 1,500 பேர் கந்து கொண்டனர். அதிமுக எம்பி, நவநீதகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.

முன்னதாக நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிற்பகல் 2.25 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள், தமிழக அமைச்சர்கள் வரவேற்றனர். கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், உமர்அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேற்று மதியம் சென்னை விமான நிலையம் வந்தார். அவர்களை உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று வரவேற்றார்.

Related Stories: