தமிழ்நாட்டில் அடுத்த நிதியாண்டில் மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் அடுத்த நிதியாண்டில் மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய அவர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த நிதியாண்டில் 100 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றிருப்பதால் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 50 மாணவர்கள் சேர்க்கை நடத்த ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்கப்படும் என்று கூறினார்.

அடுத்த நிதியாண்டில் காஞ்சிபுரம், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு விரைவில் ஐ பேட் வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். போர் பதற்றத்துடன் தமிழகம் திரும்பும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் தேவைப்பட்டால் கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Related Stories: