உக்ரைனில் வான்வெளி மூடப்பட்டதால் 16,000 இந்தியரை தரைவழி மார்க்கமாக அழைத்து வர ஏற்பாடு; ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியாவுடன் ஜெய்சங்கர் பேச்சு

புதுடெல்லி: உக்ரைனில் வான்வெளி மூடப்பட்டதால் சிக்கித் தவிக்கும் இந்தியரை தரை மார்க்கமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியாவுடன் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தி உள்ளார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை  பாதுகாப்புடன் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது.  ரஷ்யாவின் தாக்குதல் அச்சத்தால் உக்ரைன் தனது வான்வெளியை மூடியுள்ளது.  அதனால் தரை வழியாக இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று  வருகின்றன. இதுதொடர்பாக உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி  மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம்  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்றிரவு பேசினார்.  

உக்ரைனில் இருந்து சுமார் 16,000 இந்தியர்களை ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா குடியரசு மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் நில எல்லை வழியாக அழைத்து  வருவதற்கு இந்தியா தரப்பில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,  ‘உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக ருமேனியாவின் வெளியுறவு  அமைச்சர் போக்டன் ஓரெஸ்குவிடம் பேசினேன். அவர்கள் அளித்த ஒத்துழைப்பை  மிகவும் பாராட்டுகிறேன். இந்திய வெளியுறவு அமைச்சகம், ருமேனியாவின்  வெளிவிவகார அமைச்சகத்துடன் இணைந்து எல்லையில் உள்ள மக்களை விரைவாக  வெளியேற்றுவதை உறுதிசெய்யும்.

ஹங்கேரியின் வெளியுறவு அமைச்சர் பீட்டர்  சிஜார்டோவுடனும், ஸ்லோவாக்கியாவின் வெளியுறவு அமைச்சர் இவான்  கோர்சோக்கையுடனும் பேசினேன். உக்ரைனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்  குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் பேசினேன்.  பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமே பிரச்னைகளுக்கு தீர்வு காண  வேண்டும் என்று வலியுறுத்தினேன். இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் லிஸ்  டிரஸ் உடன் உக்ரைனின் நிலைமை குறித்து ஆலோசனைகளை நடத்தினேன்’ என்று  தெரிவித்துள்ளார். இந்திய மாணவர்களையும், மக்களையும் மீட்பதற்கான நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கும்படி உக்ரைன் அரசிடம் இந்தியா தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: