25 நாட்களாகியும் சிரமப்படுகிறேன் ஒமிக்ரான் ஒரு ‘சைலன்ட் கில்லர்’: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

புதுடெல்லி: ஒமிக்ரான் தொற்று ஒரு ‘சைலன்ட் கில்லர்’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் ஒமிக்ரான், டெல்டா வகை கொரோனா வைரஸ்களால் 3வது அலை ஏற்பட்டது. ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் எடுத்த ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் இதன் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது, தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால் வாரத்தில் 2 நாட்கள் நேரிடையாகவும், மற்ற நாட்களில் ஆன்லைன் மூலமாகவும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அனைத்து நாட்களிலும் வழக்கு விசாரணைகளை நேரடியாக நடத்த வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு நேற்று பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘‘ஒமிக்ரான் ஒரு சைலன்ட் கில்லர் என்பது உங்களுக்கு தெரியுமா? முதல் அலையில் நான் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டேன். 4 நாட்களில் அதில் இருந்து குணமடைந்து விட்டேன். ஆனால், தற்போதுள்ள கொரோனா அலையில், குணமடைவதற்கு 25 நாட்கள் ஆகிறது. நான் இன்னும் சிரமப்படுகிறேன். தற்போது, தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரமாக அதிகரித்துள்ளது,\” என்றார். இதனை தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர், ‘‘ஒமிக்ரான் மிகவும் வீரியமில்லாதது. இதில் நீங்கள் துரதிருஷ்டசாலி. ஆனால், மக்கள் விரைவில் குணமடைந்து விடுகின்றனர்,’’ என்றார். அதற்கு தலைமை நீதிபதி ரமணா, ‘‘ஓகே... பொறுத்திருந்து பார்ப்போம்,’’ என்று கூறி, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

* மீண்டும் அதிகரித்த தொற்று

இந்தியாவில் நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 13,405 ஆக சரிந்து இருந்த நிலையில்,  மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 15,102 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 67 ஆயிரத்து 31 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தொற்று பாதித்த 278 பேர் இறந்துள்ளனர். இதனால், கொரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: