2019ம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் செல்லும் : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

சென்னை : 2019ம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 2015ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்று அவர்கள் பதவி காலம் 2018ல் முடிந்தது. விஷால் அணி பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. ஆனால் வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை என்பதால் தேர்தலை ரத்து செய்ய கோரி நடிகர்கள் ஏழுமலை, பெஞ்சமின் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கல்யாணசுந்தரம், 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நடந்த தேர்தல் செல்லாது என்று உத்தரவிட்டிருந்தார்.  நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்த பின் எடுத்த முடிவு என்பதாலும் அவர்கள் நியமித்த நீதிபதி பத்மநாபன் நடத்திய தேர்தல் என்பதாலும் அது செல்லாது எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அவரின் தீர்ப்பை ரத்து செய்ய கோரி நாசர், விஷால், கார்த்தியின் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை நீதிபதி சத்யநாராயணா, முகமது ஷபீக் அமர்வு விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019ல் நடந்த தேர்தல் செல்லும்.தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த தேவையில்லை.தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிடுகிறோம். லாக்கரில் உள்ள வாக்குப் பெட்டியை தேர்தல் அதிகாரியிடம் வங்கி ஒப்படைக்க வேண்டும்.2019 ஜூன் 23ல் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ணி முடிவுகளை அறிவிக்க தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கிறோம். என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: