திருவண்ணாமலையில் ஜாமீன் கிடைக்காததால் கோர்ட் முதல் தளத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி-கை, கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கோர்ட்டில் ஜாமீன் கிடைக்காததால் முதல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர் கை, கால் முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பரிமளா(35). இவருக்கும் அதேகிராமத்தை சேர்ந்த எல்லப்பன்(48) என்பவருக்கும் இடையே கடந்தாண்டு நவம்பர் மாதம் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தண்டராம்பட்டு போலீசில் பரிமளா புகார் ெசய்தார். அதன்பேரில் எல்லப்பன், அவரது மகன்கள் பட்டுசாமி(24), பாலச்சந்திரன்(22), உறவினர் ராஜா(30) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டப்பிரிவிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பட்டுசாமி உள்ளிட்ட 4 பேரும் நேற்று திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்சிஎஸ்டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது புகார் அளித்த பரிமளா, கோர்ட்டில் ஆஜராகிய 4 பேருக்கும் ஜாமீன் அளிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

எனவே, எல்லப்பன் உட்பட 4 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவை கேட்டதும் கோர்ட் வளாகத்தில் நின்றிருந்த பட்டுசாமி, திடீரென கோர்ட் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று கீழே விழுந்த பட்டுசாமியை மீட்டனர். கைகள் மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்த அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கோர்ட் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: