ராமேஸ்வரம் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்: மார்ச் 1ம் தேதி தேரோட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் மகா சிவராத்திரி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு மேல் ஸ்படிகலிங்க பூஜை, பின் சுவாமி-அம்பாள் சன்னதிகளில் கால பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி சன்னதி எதிரிலுள்ள நந்திகேசுவரர் மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து தங்க கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து 10.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது.

ஸ்ரீராம் குருக்கள், சர்வ சாதகம் சிவமணி ஆகியோர் கொடியேற்றினர். பின் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் தக்கார் குமரன் சேதுபதி, இணை கமிஷனர் பழனிக்குமார், மேலாளர் சீனிவாசன் உட்பட கோயில் ஊழியர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். கொடியேற்றத்தை தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு கோயில் நாயகர் வாசலில் தீபாரதனை முடிந்து ராமநாதசுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளல் நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்.23ம் தேதி சுவாமி- அம்பாள் கெந்தமாதன பர்வதம் எழுந்தருளல், பிப்.27 ல் தங்கப்பல்லக்கில முத்தங்கி சேவையில் எழுந்தருளல், ஒன்பதாம் திருநாளான மார்ச் 1ம் தேதி ‘மகா சிவராத்திரி ’ சுவாமி-அம்பாள் தேரோட்டம், மார்ச் 2ல் மாசி அமாவாசை தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.

Related Stories: