சட்டமன்றத்தை கூட்டும்படி அனுப்பிய முதல்வர் மம்தாவின் பரிந்துரை நிராகரிப்பு: மேற்கு வங்க ஆளுநர் தங்கார் அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவையை கூட்டும்படி முதல்வர் மம்தா அளித்த பரிந்துரையை ஆளுநர் தங்கார் திருப்பி அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வர் மம்தாவுக்கும் ஆளுநர் ஜெகதீப் தங்காருக்கும் இடையே மோதல் நிலவுகிறது. இந்நிலையில், தனது கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக சட்டப்பேரவையை தற்காலிகமாக முடக்கி வைக்கும்படி ஆளுநர் தங்காருக்கு மம்தா பரிந்துரை செய்தார். அதை ஏற்று சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கினார்.

இந்நிலையில், சட்டப்பேரவையை மார்ச் 7ம் தேதி கூட்டும்படி முதல்வர் மம்தா அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் தங்கார் நேற்று திடீரென நிராகரித்தார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  ``சட்டப்பேரவையை கூட்டுவதற்கு மாநில அமைச்சரவை தான் பரிந்துரைக்க வேண்டும். மார்ச் 7ம் தேதி சட்டப்பேரவையை கூட்டும்படி முதல்வர் மம்தா பரிந்துரை செய்திருப்பதை அரசியலமைப்பு சட்டத்தின் 166 (3) வது பிரிவின் கீழ் ஆளுநரால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, அரசியலமைப்பு சட்டத்துக்குட்பட்டு அவரது கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன,’ என்று கூறியுள்ளார். இத்துடன், அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தையும் இணைந்துள்ளார்.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுகேந்து சேகர் ராய் கூறுகையில், `மக்கள் பிரதிநிதிகள் முறையாக கையெழுத்திட்ட கோப்புகளை மதிக்காமல் நடப்பதே ஆளுநரின் வேலையாகி விட்டது. சட்டப்பேரவையை கூட்டும்படி சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சரின் ஒப்புதலுடன் முதல்வரின் பரிந்துரையும் அனுப்பப்பட்டது. இதை எப்படி அமைச்சரவையின் ஒப்புதல் இல்லை என்று அவரால் கூற முடியும்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: