கவர்னர் தனது பணியை சிறப்பாக செய்கிறார்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பாராட்டு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி ராஜ்நிவாசில் தேநீர் விருந்து நிகழ்ச்சி மற்றும் ஓராண்டு செயல்பாடுகள், சாதனைகள் குறித்த தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு கவர்னர் தமிழிசைக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:- தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரிக்கு கூடுதலாக துணைநிலை ஆளுநராகவும் 2 பொறுப்புகள் வகித்து நமது கவர்னர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

காலையில் தெலங்கானா என்றால், மாலையில் புதுச்சேரி, மறுநாள் காலை டெல்லி என பறந்து, பறந்து சோர்வின்றி பணிகளை மேற்கொள்கிறார்.  நான் முதல்வராக பொறுப்பேற்றபோது, ஒரு நல்ல துணைநிலை ஆளுநர் கிடைத்திருக்கிறார் என்பது எனக்கும், அரசுக்கும் மகிழ்ச்சி.புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக அக்கறையுடன் அவர் செயல்பட்டு வருகிறார். அண்டை மாநிலங்களைப் போல் புதுச்சேரியும் செழுமையாக இருக்க வேண்டும், மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் வெளிப்படுத்துகிறார். எண்ணத்தை வெளிப்படுத்தியதை மட்டுமின்றி அதை இதுவரை அவர் செய்து கொடுத்து வருகிறார். இல்லாவிட்டால் எனக்கும், அரசுக்கும் நிறைய சங்கடம் ஏற்படும். அந்த நிலை இப்போது இல்லை.

மக்களுக்காக நீங்கள் சொல்கிறீர்கள், நிச்சயமாக நான் முடிந்ததை செய்கிறேன் என்பது அவரது எண்ணம். அதனால் தான் இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து நாங்கள் எண்ணிய அத்தனை நலத்திட்டங்களையும் முழுமையாக செய்து கொண்டிருக்கிறோம். இதை யாரும் மறுக்க முடியாது. தீபாவளி, பொங்கல், கனமழை, கொரோனா தொற்று பாதிப்பு என எந்த நிலையிலும் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை தாராளமாக எந்தவித சிரமுமின்றி இந்த அரசு செய்து கொடுக்க முடிந்தது. நமது ஆளுநர்தான் இதற்கு காரணம். கொரோனா தொற்று காலத்தில் அரசுக்கு நிறைய சிரமமில்லை. அதற்கு, நமது துணைநிலை ஆளுநர் ஒரு மருத்துவர் என்பது தான்.

புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததிற்கும், பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் போனதற்கும் அவரது செயல்பாடு தான் காரணம். கடந்தகால கவர்னர்களை நினைத்து பார்க்கும்போது நமது துணைநிலை ஆளுநரை மறக்கவே முடியாது. எல்லாவற்றையும் எளிதாக கொடுத்து வருகிறார். கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கிறார். ஆளுநர் மாளிகையில் கோப்புகள் தங்கி இருந்தது என்ற நிலை ஏற்படாத அளவுக்கு அவர் தனது பணியை சிறப்பாக செய்கிறார். மருத்துவ துறையில் புதுச்சேரி சிறந்து விளங்க வேண்டும், முழுமையான மருத்துவ வசதி இங்கேயே கிடைக்க வேண்டும், சென்னையில் இருப்பது போல் புதுச்சேரியில் சிறப்பு மருத்துவ வசதியை கொடுக்க வேண்டும்.

அதற்கு தகுந்தாற்போல் முடிவுகளை எடுத்து செய்யுங்கள் என்பதை அவர் மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறார். அதற்கேற்றவாறு சில ஆலோசனைகளையும் அவர் சொல்லி இருக்கிறார். புதுச்சேரி மாநில வளர்ச்சி மீது மிகுந்த அக்கறை கொண்டு தனது பணியை ஓராண்டு சிறப்பாக செய்து வருகிறார். அவரது பணி மேலும் சிறக்க மனமார்ந்து வாழ்த்துக்கள். இவ்வாறு முதல்வர் பேசினார். இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், சந்திரபிரியங்கா, சாய் ஜெ சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு,

எதிர்க்கட்சி தலைவர் சிவா, செல்வகணபதி எம்பி., அரசு கொறடா ஏகேடி.ஆறுமுகம், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், பிரகாஷ்குமார், கேஎஸ்பி.ரமேஷ், வெங்கடேசன், அசோக்பாபு, விவிலியன் ரிச்சர்டு, திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக.தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தலைமை செயலர் அஸ்வனிகுமார் நோக்க உரையாற்றினார். கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி வரவேற்றார். கவர்னரின் தனிச்செயலர் தரன் நன்றி கூறினார்.

“ஈகோ பார்க்காமல் பணியாற்றுகிறேன்”

 இவ்விழாவில் கவர்னர் தமிழிசை ஏற்புரையாற்றி பேசுகையில், அனைவரின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்வொரு பணியையும் முழுமையாக செய்ய முடியாது. புதுச்சேரி மக்களுக்கு எது நல்லது செய்ய வேண்டுமோ, அதனை உணர்வுபூர்வமாக மனதின் அளவில் எல்லா கோப்புகளும் முடிவெடுக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் அதிகாரம் என்னவென்றும், ஆளுநர் மாளிகையின் அதிகாரம் என்னவென்றும் எனக்கு தெரியும். மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு நல்ல திட்டம் தாமதமாகும் என்பதால், முழுமையான நல்ல இதயத்துடன் முடிவு செய்கிறேன். எந்த ஒழிவுமறைவும் எங்கள் அலுவலகத்தில் கிடையாது, எந்தவித சுயலாபமும் கிடையாது.

சோம்பேறித்தனம் எனது அகராதியிலேயே கிடையாது. புதுவை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை மனநிலை தான் இதற்கு காரணம். உங்களோடு ஒருவளாக, உங்கள் சகோதரியாக, ஈகோ பார்க்காமல் எல்லாரிடமும் இணைந்து பணியாற்றுகிறேன். தமிழகத்தைபோல் புதுவையிலும் தமிழ் விளையாட வேண்டும். எவ்வளவு நாள் இங்கு ஆளுநராக இருப்பேன் என்று சொல்ல முடியாது. ஆனால் இருக்கும் வரை எனது சேவையும், அன்பும் தொடரும் என்றார்.

Related Stories: