5 நதிகள் இணைப்பு திட்டம் 6 மாநிலங்களுடன் இன்று ஆலோசனை

புதுடெல்லி: கோதாவரி - காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழகம் உட்பட 6 மாநிலங்களுடன் டெல்லியில் ஒன்றிய அரசு இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது. நாடாளுமன்றத்தில் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோதாவரி - காவிரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அது குறித்து விரைவில் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டது. அதன்படி, மாநில அரசுகளுடன் டெல்லியில் ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களின் நீர்வளத் துறையின் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தின் சார்பாக நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில், காவிரி - கோதாவரி உள்ளிட்ட 5 நதிகள் இணைப்பு திட்டத்தை எப்படி செயல்படுத்துவது. சாதக பாதகங்கள் குறித்து மாநிலங்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசின் செயல் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், முல்லைப் பெரியாறு அணையை  மறு ஆய்வு செய்ய தேவையில்லை என்றும், பராமரிப்பு பணிக்கு கேரள அரசு அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழகத்தின் சார்பாக வலியுறுத்தப்பட உள்ளது.

Related Stories: