தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனுக்கு தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு..!!

மும்பை: தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேசிய பங்குச்சந்தை போன்று மிக முக்கியமான இடத்தில், குறிப்பாக மக்களின் பணம் அதிகம் புழக்கத்தில் இருக்கும் இடங்களில் இருப்பவர்கள் அதிகப்படியான கவனத்துடனும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் ஆனால் உண்மையில் இத்தகைய பதவிகளில் இருக்கும் பலர் அப்படி இருப்பது இல்லை என்பதற்கு முக்கிய உதாரணமாக விளங்குகிறார் தேசிய பங்குச்சந்தை முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா.

சித்ரா ராமகிருஷ்ணா சுமார் 20 வருடங்களாக முகம் தெரியாத ஒரு இமயமலை சாமியார் ஒருவருக்கு ஈமெயில் மூலம் பல்வேறு முக்கியமான தரவுகளைப் பகிர்ந்து, அவர் கூறும் முடிவுகளை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் நிறைவேற்றி வந்துள்ளது செபி அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைவராக சித்ரா ராமகிருஷ்ணா இருந்த போது தனக்கு கீழ் இருக்கும் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கொடுக்க வேண்டும், யாருக்குப் பதவி உயர்வு அளிக்க வேண்டும், யாரை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்பது போன்ற அனைத்து முடிவுகளையும் சாமியார் கட்டளையிட்டு செய்துள்ளார்.

சாமியார் உத்தரவின் பெயரில் தான் சித்ரா ராமகிருஷ்ணா, பால்மர் லாரி நிறுவனத்தில் வெறும் 15 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த ஆனந்த் சுப்ரமணியனை ஜனவரி 18, 2013ல் 1.68 கோடி ரூபாய் சம்பளத்தில் தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக நியமித்தார். ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமித்ததாகவும் குற்றசாட்டு எழுந்தது. தொடர்ந்து, தேசிய பங்குச்சந்தையின் விதிகளிலேயே முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்து வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு செபி, தேசியபங்குச்சந்தை மற்றும் சித்ரா ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு அபராதமும் விதித்தது.

இந்நிலையில், தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனின் இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சேலையூர் மற்றும் அண்ணாசாலையில் உள்ள வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சித்ரா ராமகிருஷ்ணன் மீதான புகார்கள் குறித்து பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரித்து வருகிறது. முறைகேடுகளின் பின்னணி என்ன? கோல் லொகேஷன் ஊழலுக்கு பின்னணியில் இருந்தது யார்? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

சித்ரா ராமகிருஷ்ணன் நியமனங்கள், பதவி உயர்வுகள், பதவி மாற்றங்கள் செய்தது யாருடைய அறிவுரையின் அடிப்படையில் நடைபெற்றது? உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்ரா ராமகிருஷ்ணன் இத்தகைய முறைகேட்டில் ஈடுபட்டார் என்று தெரிந்திருந்தும் அவர் மீது புகார் அளிக்காமல் அவரை ராஜினாமா செய்து தேசிய பங்குச்சந்தையை விட்டு எவ்வித பிரச்னையும் இன்றி வெளியேறியதற்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சித்ரா ராமகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்ட சாமியார் யார் என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது.

Related Stories: